Principal Message

கல்வி முறைமையில் தலைமுறை தாண்டிய பாய்சலை வலுப்படுத்தும் தங்களை மனமார வாழ்த்துகின்றோம்.

ஆழமான கற்றல் மற்றும் திறனான கற்பித்தல் கல்விப்புலத்தை எப்பொழுதும் வலுவுடையதாக பேணுகின்றது. சமகால இலங்கை முன்னெப்பொழுதும் கண்டிராத வகையில் கற்றல், கற்பித்தல் முன்னெடுப்புக்களில் மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இணையவழிக்கற்கைகள் எனும் பேசுபொருள் மேலோங்கி கல்விப்புலத்தை இயக்குகின்றது. 1980களின் பிற்பாடு பரவலாக மேலைத்தேச நாடுகள் இணையவழிக் கற்கைகள் தொடர்பான முன்னெடுப்புக்களுடன் கல்வி வளத்தை மேம்படுத்தின.

          இலங்கைக்கு அவ்வகையான தேவையும் சந்தர்ப்பமும் இவ் COVID-19 நோய்க் காலத்தில் தான் அதிகமாக உணரப்பட்டிருக்கின்றது. ஏலவே இலங்கையின் பல்கலைக்கழக கற்றல் முறைகள், தொழிற்கற்கை முறைமைகள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்பின் கற்கை முறைமைகள் என்பன இணையத்துடன் இணைந்து பயணித்திருந்தன. ஆனால் பாடசாலைக் கல்வி சமகாலத்தில் இணையவழி வசதிவாய்ப்புக்களை பெரிதும் நம்பியிருக்கின்றது. பாடசாலை மாணவர்களின் இணையவழி கற்றல் செயல்வாதங்கள் முன்னுக்குப்பின் முரணானதும், பாராட்டுதற்குரியதுமான கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இணையவழி கற்றல் செயற்பாட்டை முழுமையாக நம்பவேண்டிய காலத்திணிப்பில் நாம் இயங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.

                    Modules மற்றும் Semester கற்றல் முறைகளினூடாக கடந்து பயணிக்கவிருக்கும் பாடசாலை கல்விப்புலம் முற்கூட்டியே மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுயதேடல் தொடர்பாக விழிப்படைய வைத்திருப்பதுவும், ஒரு படி மேலேறி நவீன கற்றல் சாதனங்களை கையாளுகின்ற பயிற்சியினை பெறுகின்றதுமான இக்காலச்சூழமைவு எதிர்காலக் கல்வித்தரத்தை மேலும் வலுவுடையதாக்குகின்றது. இவ்வகையினதான கல்விப்பயணத்துடன் மத்திய கல்லூரி சவால்களைத் தாண்டி நகர்வதற்கு பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்கும், பற்றுதலும் உன்னதமாக கிடைக்கின்றது. குறிப்பாக Educare அமையம் அண்மைக்காலமாக எமது பாடசாலையின் இணையவழிக்கல்வி தொடர்பான மேம்பாட்டிற்கு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. Smart classroom, Smart board மற்றும் e Learning centre எனும் கட்டமைப்பினூடாக கற்றலுக்கான இணையத்தளமும் அதற்குத் தேவையான கற்றல் தரவுகளையும் மடிக்கணினிகளையும் குறிப்பிட்டளவு வழங்கி இணைய வழிக்கற்றலுக்கான இயங்குதளத்தை கட்டமைப்பதற்கான முயற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

                     இவ்வாறான முயற்சிகள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கல்வி மீதான பங்களிப்பிற்கு ஊக்குவிக்கின்றது. இங்கே எமது மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கும் எதிர்கால கல்வி மற்றும் தொழிலுலகிற்கு தயாராக்குவதற்குமான முயற்சியாகவே பாடசாலைச்சமூகம் இதை கருதுகின்றது. தொடர்ந்தும் இணைந்து முயற்சிக்க ஆசிரியர்களுக்கும் Educare அமையத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதிபர் திரு எழில்வேந்தன்

யா/ மத்திய கல்லூரி.

23/09/2021